மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தொடங்கி வைத்த ஆதிபராசக்தி அன்னை இல்லம் கடந்த 15 ஆண்டுக்கு மேலாக சிறப்பாக செயல்படுகிறது. இங்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக்குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி அளித்து, வாழ்வில் அடுத்த நிலைக்குக்கொண்டு செல்லும் சிறப்பான சேவையை இப்பள்ளி செய்து வருகிறது.
பள்ளியின் தரத்தை டியுவி இந்தியா மற்றும் சென்னை ஐஎஸ்ஓ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 22ம்தேதி முதல் கூட்டு ஆய்வு செய்தது. பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு இப்பள்ளிக்கு இஓஎம்எஸ் ஐஎஸ்ஓ 21001:2018 தரச்சான்றிதழ் பரிந்துரை செய்து, பள்ளி வளாகத்தில் சர்வதேச தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் டியுவி இந்தியா நிறுவன பொதுமேலாளர் வினோத் பணிக்கர், முதுநிலை மேலாளர் அருண், மேலாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, அன்னை இல்ல ஐஎஸ்ஓ 21001:2018 சர்வதேச தரச்சான்றிதழை அன்னை இல்லம் பள்ளி தாளாளர் தேவி பங்காருவிடம் வழங்கினர். விழாவில், அன்னை இல்ல மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.