Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மேல்மலையனூர் அருகே சித்தியை கல்லால் அடித்து கொன்று கல்லை கட்டி கிணற்றில் சடலம் வீச்சு

*சொத்து தகராறில் வாலிபர் பயங்கரம்

மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா, துரிஞ்சம்பூணடி கிராமத்தில் வசிப்பவர் பழனிவேல். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விருதாம்பாள் என்ற மனைவியும் பாலகுரு மற்றும் பிரகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவரை பிரிந்த விருதாம்பாள் தாய் வீடான திண்டிவனம் அடுத்த நடுவணந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இதனால் இரண்டாவதாக ஜெயக்கொடி என்பவரை பழனிவேல் திருமணம் செய்து துரிஞ்சம்பூண்டி கிராமத்தில் குடும்பம் நடத்தியதோடு மனைவியுடன் சேர்ந்து செஞ்சியில் கீரை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழனிவேல் உடல் நலக்குறைவால் காலமானார். இதை தொடர்ந்து ஜெயக்கொடி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது பிள்ளைகள் சென்னையில் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயக்கொடி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், தனியாக படுத்திருந்த அவரை தாக்கி கொலை செய்ததோடு, கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாயமான ஜெயக்கொடிைய தேடும் பணியில் மேல்மலையனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஜெயக்கொடியின் வீட்டிலிருந்து ஆய்வு செய்தபோது, அங்கிருந்து அருகிலுள்ள விவசாய கிணறு வரையிலும் உடல் இழுத்து செல்லப்பட்டதற்கான தடயங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து கிணற்றில் இறங்கி தேடும்போது, சடலமாக ஜெயக்கொடியின் உடலை கைப்பற்றினர். மேலும் அவரது காலில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது.இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், ஜெயக்கொடி மீது அவரது கணவனின் முதல் மனைவி குடும்பத்தோடு முன்பகை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பழனிவேலின் முதல் மனைவி மகன்களான திண்டிவனம் அடுத்த நடுவணந்தல் கிராமத்தில் வசிக்கும் சிப்காட் ஊழியரான பிரகாஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் துப்பு துலங்கியது.

அதாவது சொத்துக்காக சித்தியை கல்லால் அடித்துக் கொலை செய்ததாகவும், பின்பு கயிறு கட்டி உடலை அருகிலுள்ள விவசாய கிணற்றுக்கு இழுத்துச் சென்றதோடு, கல்லை கட்டி உள்ளே சடலத்தை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி வந்ததாகவும் பிரகாஷ் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து பிரகாஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.