கட்டுமான பணி முடிந்து 3 வருடமாச்சு... மேலமாத்தூர் ஊராட்சி அலுவலகம் திறக்கப்படுமா?.. கிராம மக்கள் எதிர்பார்ப்பு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஊராட்சி அலுவலக கட்டுமான பணி முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். சோழவந்தான்-கோச்சடை சாலையில் உள்ளது மேலமாத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட மேலமாத்தூர், காமாட்சிபுரம், நாடார் தெரு, புல்லூத்து ஆகிய கிராம பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்குரிய ஊராட்சி அலுவலக கட்டிடம் காமாட்சிபுரத்தில் செயல்பட்டு வந்தது. இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2020-22ன் படி ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. காமாட்சிபுரம் கண்மாய் கரை பகுதியில் இக்கட்டிட பணி துவங்கி 3 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்தது.
இருப்பினும் இன்னும் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ரூ.22.65 லட்சம் அரசு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் கிடக்கிறது. பழைய ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து படுமோசமாக இருப்பதால் அங்கு அச்சத்துடன் சென்று வருகிறோம். பணிகள் முடிந்தும் புதிய கட்டிடம் திறக்கப்படாததால், தற்போது குடி மகன்களின் கூடாரமாக இது மாறி விட்டது. மேலும் திறக்கும் முன்பே இக்கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இதன் தரம் கேள்விக்குறியாக உள்ளது. இக்கட்டிடத்தை விரைவில் திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.