திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மரியஜீஸோ என்பவர் வெற்றிபெற்று முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசையும், ஆணழகன் பட்டத்தையும் வென்றார். 2ம் பரிசாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டர்சன் என்பவர் ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி மாநிலத்ததைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வென்றனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தின் செயலாளர் ராஜேஷ்குமார், இந்தியன் பாடி பில்டர்ஸ் பெடரேஷன் தலைவர் அரசு, செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர் கோல்ட் பிரகாஷ், தமிழ்நாடு சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், பாலமுருகன், சரவணன், மாவட்ட நிர்வாகி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.