கூட்டுறவு சங்கம் பெயரில் மெகா மோசடி; பாலிவுட் நடிகர்கள் 2 பேர் மீது வழக்கு: கோடிக்கணக்கில் சுருட்டியது அம்பலம்
லக்னோ: பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த கூட்டுறவு சங்க விவகாரத்தில், பிரபல பாலிவுட் நடிகர்கள் ஸ்ரேயாஸ் தல்படே, அலோக் நாத் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் செயல்பட்டு வந்த ‘லோனி அர்பன் மல்டி-ஸ்டேட் கிரெடிட் அண்ட் த்ரிஃப்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி’ என்ற கூட்டுறவு சங்கம், தங்களிடம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.
இந்தத் திட்டங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஸ் தல்படே விளம்பரதாரராகவும், அலோக் நாத் விளம்பரத் தூதராகவும் முன்னிறுத்தப்பட்டனர். இவர்களின் புகழைப் பயன்படுத்தி, கிராமப்புற மக்கள் உட்பட நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2023ம் ஆண்டே முதலீட்டாளர்களுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்திய அந்த நிறுவனம், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மூடப்பட்டதுடன், அதன் நிர்வாகிகள் தலைமறைவாகினர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.
முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் வசூலித்துக் கொடுத்த முகவர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்காததால் அளித்த புகாரின் பேரில், தற்போது நடிகர்கள் ஸ்ரேயாஸ் தல்படே, அலோக் நாத் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே மோசடி தொடர்பாக ஏற்கெனவே பதியப்பட்ட வழக்குகளில், உச்ச நீதிமன்றம் இந்த இரண்டு நடிகர்களுக்கும் கைது நடவடிக்கையிலிருந்து இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியிருந்தது. இருப்பினும், தற்போதைய விசாரணையை அந்த உத்தரவு தடுக்காது என போலீசார் கூறியுள்ளனர்.
