Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என கணித்தது எப்படி? கூட்டம் அதிகரித்ததும் விஜய் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? பெரிய மைதானத்தை ஏன் கேட்டுப் பெறவில்லை? தவெகவினருக்கு நீதிபதி சரமாரி கேள்வி

கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் தவெகவினரிடம் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என கணித்ததே தவறு. கூட்டம் அதிகமானதால் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில், கருர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் நேற்று காலை 10.30 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கரூர் மாவட்ட ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் காலை 11.30 மணிக்கு நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தவெக தரப்பில் வழக்கறிஞர் அரசு தலைமையில், திருச்சி, சேலம் பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதே போல், தமிழக அரசு தரப்பு சார்பில் வழக்கறிஞர் தண்டாயுதபாணி ஆஜரானர். பிற்பகல் 12 முதல் 1 மணி வரை காரசாரமான விவாதம் நடைபெற்றது. நீதிபதி பரத்குமார், போலீசார் உங்களை அடித்தார்களா? என்று கேட்டதற்கு இருவரும் இல்லை என பதிலளித்தனர். உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா என கேட்டதற்கு இல்லை என்று கூறினர்.

தவெக வழக்கறிஞர்கள்: கைது செய்யப்படும் அளவுக்கு இந்த வழக்கு இல்லை. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும்.

நீதிபதி: தொடர்ந்து, விசாரணை நடக்கட்டும் பின்னர் பார்க்கலாம்.

தவெக வழக்கறிஞர்கள்: லைட்ஹவுஸ் கார்னர் பகுதி உட்பட சில பகுதிகளில் அனுமதி தரும்படி காவல்துறையிடம் கேட்டோம். ஆனால், வேலுச்சாமிபுரம் பகுதிதான் வழங்கப்பட்டது.

போலீசார் தரப்பு: கரூரில் சனிக்கிழமை என்பதால் அதிகளவு கூட்டம் வரும். எனவே, அவர்கள் கேட்ட இடம் கொடுக்கப்படவில்லை.

தவெக வழக்கறிஞர்கள்: சனிக்கிழமை என்பதால் சம்பளம் வாங்க தொழிலாளர்கள் சென்று விடுவார்கள். அதிக கூட்டம் வரவாய்ப்பில்லை.

போலீஸ் தரப்பு: இவர்கள் கேட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் பாலம் உள்ளது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பாலத்தில் இருந்து தொண்டர்கள், பொதுமக்கள் குதிக்க வாய்ப்புள்ளது என கூறினோம். மேலும், அமராவதி பாலம் மட்டுமின்றி, செம்மடை மேம்பாலத்திலும் ரோடு ஷோ நடத்தக்கூடாது, இதனால் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறினோம். மேலும், தவிட்டுப்பாளையத்தில் இருந்து திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதிக்கு வருவதற்கு 20 நிமிடங்களே போதும், ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆனது.

முதல் நாள் இதே இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தார். 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்றனர். அதன்படி, 15 ஆயிரம் பேர்கள்தான் வந்தனர். எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. விஜய் பிரசார பஸ்சுக்குள் செல்லாமல் இருந்திருந்தால் கூட்டம் அவரை பார்த்து விட்டு கலைந்து இருக்கும். ஆனால் நடக்கவில்லை. பிரசார சொகுசு வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் போதும் என கூறினோம், ஆனால், ஆதவ் அர்ஜூனாதான் இன்னும் முன்னே செல்வோம் என்றார்.

விஜய் பேச ஆரம்பித்ததும் ஆம்புலன்ஸ் வந்தது. இருப்பினும் விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். ஆனால், தொண்டர்கள் ஆம்புலன்ஸை மறித்து ஏன் உள்ளே வந்தீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டனர். விஜய் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தவெக வழக்கறிஞர்கள்: சென்டர் மீடியன் கற்களை அகற்ற சொல்லி கேட்டோம். ஆனால், போலீசார் மறுத்து விட்டனர். வழி ஏற்படுத்த சில இடங்களில் மட்டும் கற்களை அகற்றுகிறோம். எங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவது குறித்து நம்பிக்கை இல்லை.

எனவே, ஜெனரேட்டர் அமைத்து கொண்டோம். போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது சாக்கடை கால்வாய்க்குள் ஏராளமானோர் விழுந்தனர். ஒருவர் மேல் ஒருவராக விழுந்தனர். கூட்டம் அதிகமாக உள்ளது, எனவே, கூடுதலாக போலீசார்களை வரவழையுங்கள் எனவும் கூறினோம். எங்கள் கட்சியினர்களை நாங்கள் தடுக்கலாம். ஆனால், பொதுமக்களை தடுக்க வேண்டியது போலீஸ்காரர்கள்தான். விஜய் பரப்புரைக்கு வந்தது தானாக வந்த கூட்டம். வண்டி வைத்து அழைத்து வரப்பட்ட கூட்டமில்லை.

நீதிபதி: (வழக்கறிஞர்களை பார்த்து) விஜய் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என கணித்ததே தவறு. கூட்டம் அளவுக்கு அதிகமாக வந்தது தெரிந்ததும் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை. அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு தெரியுமா? இது குறித்து அவரிடம் சொல்லப்பட்டதா? முதலமைச்சர் மற்றும் கட்சித்தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிடக்கூடாது. அரசியல்வாதிகள் கூட்டம் நடத்தினால் கட்சிக்காரர்கள் மட்டுமே வருவார்கள்.

ஆனால், நடிகர் விஜய் போன்றோர் கூட்டம் நடத்தினால் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் அதிகளவு வருவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சிக்கூட்டம், விஜய்யை பார்க்க அனைத்து தரப்பினர்களும் வருவார்கள். காலாண்டு மற்றும் வாரவிடுமுறை உள்ள நாட்களில் ஏன், மக்கள் குறைந்தளவே வருவார்கள் என கணக்கிட்டீர்கள்.

போலீஸ் தரப்பு: கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது. 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டி இருக்கிறது.

தவெக வழக்கறிஞர்கள்: எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்து விட்டனர் என்பது எங்களுக்கும் வருத்தம்தான். அதனால்தான் விஜய் வெளியே வரவில்லை. நாங்கள்தான் காரணம் என கிரியேட்டிவ் செய்யப்படுகிறது.

நீதிபதி: எந்த ஆவணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனச்சாட்சிபடி உத்தரவு பிறப்பிப்பேன்.

இவ்வாறு கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். பின்னர், அரை மணி நேரத்துக்கு பிறகு 1.30 மணியளவில் நீதிபதி மீண்டும் வந்தார். மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் முன்னால் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இருவரையும் அக்டோபர் 14ம்தேதி வரை (15நாட்கள்) திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான போலீசார், இருவரையும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இருவரும் மாலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

* தவிட்டுப்பாளையத்தில் இருந்து திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதிக்கு வருவதற்கு 20 நிமிடங்களே போதும், ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆனது. முதல் நாள் இதே இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தார். 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்றனர். அதன்படி, 15 ஆயிரம் பேர்கள்தான் வந்தனர். எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

* விஜய் பிரசார பஸ்சுக்குள் செல்லாமல் இருந்திருந்தால் கூட்டம் அவரை பார்த்து விட்டு கலைந்து இருக்கும். ஆனால் நடக்கவில்லை. பிரசார சொகுசு வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் போதும் என கூறினோம், ஆனால், ஆதவ் அர்ஜூனாதான் இன்னும் முன்னே செல்வோம் என்றார்.

* விஜய் பேச ஆரம்பித்ததும் ஆம்புலன்ஸ் வந்தது. இருப்பினும் விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். ஆனால், தொண்டர்கள் ஆம்புலன்ஸை மறித்து ஏன் உள்ளே வந்தீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

* சனிக்கிழமை என்பதால் சம்பளம் வாங்க தொழிலாளர்கள் சென்று விடுவார்கள். அதிக கூட்டம் வரவாய்ப்பில்லை.