மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களின் சொத்து தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர்கள் சபை ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு, முறையாக பராமரித்து, கோயில் புதுபிப்பு பணிகளை முடித்து விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 2021ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு வரும் வியாழக்கிழமை (செப்.4) விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா மற்றும் குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் சொத்துகள் மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோயில் குடமுழுக்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என கோயில் இணை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், சொத்துகள் குறித்து தெளிவான விவரங்கள் இணை ஆணையரின் அறிக்கையில் இல்லை. கோயில் இணை ஆணையரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என கூறி அறநிலையத்துறையின் அறிக்கையை அதிகாரிகளிடம் நீதிபதிகள் திருப்பி அளித்தனர்.
இதையடுத்து கோயில் சொத்து எங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என சொன்னால்தான் அதிகாரிகளுக்கு தெரியுமா? என்றும், அறநிலையத்துறையே ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாமே? என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களின் சொத்து தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள் வழக்கை அக்.7க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.