சென்னை: 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். நடப்பாண்டு மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
அதனுடன் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலையும் வெளியிட்டார். அலைட் ஹெல்த் கேர் படிப்புகள் என்பவை மருத்துவ துறையில் மருத்துவர்களை தவிர மற்ற அனைத்து சுகாதார பணிகளையும் உள்ளடக்கியது. இதில் அரசுக் கல்லூரிகளில் 3,256 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 20,026 இடங்களும் உள்ளன.
கடந்த ஜூன் 17ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடந்த விண்ணப்ப பதிவில் 61,735 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்து நேற்று அதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.