மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 6 குழந்தைகள் கடந்த 15 தினங்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தனர். அக்குழந்தைகளின் சிறுநீரக திசுவில் ‘டை எத்திலின் கிளைசால்’ எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்தது பரிசோதனை முடிவில் தெரிந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் கங்குவார் சத்திரம் தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ‘கோல்ட்ரிப்’ என்னும் இருமல் மருந்தையும், வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இருவேறு இருமல் மருந்துகளை அக்குழந்தைகள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் உட்கொண்ட மருந்துகளில் ரசாயனம் அதிகம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் விசாரணை குழுக்களை அமைத்துள்ளன. இதனிடையே மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகவும், அந்நிறுவனத்திற்கு சென்று தமிழக மருத்துவ குழுவினர் ஆய்வு செய்யுமாறும்’ கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் குருபாரதி தலைமையிலான குழுவினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதே பேட்சில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பொதுமக்களை கனிவோடு கேட்டு கொண்டார்.
இதேபோல் மத்திய பிரதேசமும், கேரளாவும் இந்த மருந்து பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளன. இருமல் மருந்துகள் தயாரிப்பு குறித்து விரிவான விசாரணைகள் நடந்து வருகிறது. மருந்துகளின் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த மருந்து உட்கொண்டவர்களுக்கு வேறு ஏதேனும் இடத்தில் பாதிப்பு நிகழ்ந்துள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய சுகாதார அமைச்சகமும் இருமல் குறித்த சில வரையறைகளை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. அதன்படி பெரும்பாலான இருமல் நோய்கள் மருந்துகளின் தலையீடு இன்றி தானாக தீரக்கூடியவையாகும். இருமல் மற்றும் சளி மருந்துகளை 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கவோ அல்லது வழங்கவோ கூடாது. மேலும் சில மருந்துகள் 5 வயது, அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கூட பரிந்துரைக்கப்படுவதில்லை.
எனவே மருந்துகள் பயன்பாட்டில் கவனமாக மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு கழகம் நடத்திய ஆய்வில் கோல்ட்ரிப் பிரான்ட் மருந்தில் டை எத்திலின் க்ளைகால் சற்று அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
மக்கள் நலம் சார்ந்த பிரச்னை என்பதால் தமிழக அரசும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த இருமல் மருந்தை பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இருமல் மருந்து தொடர்பாக வதந்திகளும் தற்போது இறக்கை கட்டி பறக்கின்றன. குறிப்பாக பாலில் இருமல் மருந்து கலந்து சாப்பிட்டால் அது விஷமாக மாறும் உள்ளிட்ட தகவல்களை நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விருந்தாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் நமக்குதான் கூடுதல் கவனம் தேவை.