ஸ்வீடன் : 2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், உடலியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நாடாளுமன்றம் நியமிக்கும் சிறப்பு குழு தேர்வு செய்து வருகிறது. இத்தகைய நோபல் பரிசு பெறுவோருக்கு பதக்கம், சான்றிதழுடன் இந்திய மதிப்பீட்டில் சுமார் 10.41 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு வரும் 10ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு இன்று (06.10.2025)அறிவித்துள்ளது.
மேரி இ.பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு கட்டுப்படுத்தி வைப்பது தொடர்பான ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. உடலில் உள்ள செல்களை நோய் எதிர்ப்பு செல்கள் தாக்காமல் இருப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ஆய்வு உதவியாக இருக்கும். உடலுக்கு ஒவ்வாத நுண்ணுயிர்களை தடுக்கக் கூடிய T செல் அமைப்பு சில வேளைகளில் வழிதவறி செயல்பட்டு விடுவது உண்டு. உடலில் உள்ள புரோட்டீனையே எதிரியாக கருதி எதிர்ப்பதால் மூட்டு வாதம், முதல் வகை சர்க்கரை நோய் ஏற்படுகின்றன. அத்தகைய டி செல்களை உருவாகாமல் கட்டுப்படுத்துவது குறித்த ஆராய்ச்சிக்கு இவ்வாண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.