முதுநிலை நீட் தேர்வு மூலம் ‘ஜீரோ, மைனஸ்’ மதிப்பெண்ணுக்கும் மருத்துவ படிப்பு: இந்திய மருத்துவக் கல்வியில் பெரும் அவலம்
புதுடெல்லி: மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்ய கொண்டுவரப்பட்ட நீட் முதுநிலைத் தேர்வில், தகுதியை முற்றிலுமாகப் புறக்கணித்து, பூஜ்ஜியம் மற்றும் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குக் கூட மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவக் கல்வியில் குறைந்தபட்சத் தரத்தை நிலைநிறுத்தி, தகுதியானவர்கள் மட்டுமே மருத்துவர்களாக உருவாவதை உறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் நீட் முதுநிலைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் அடிப்படையே சிதைக்கப்பட்டு, கல்வித்தரம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர்கள், எம்.டி, எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்காக முதுநிலை நீட் தேர்வு (மொத்த மதிப்பெண் 800) நடத்தப்படுகிறது. கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளின் தேர்வு முடிவுகளின்படி, 800 மதிப்பெண்ணுக்கு பூஜ்ஜியம் (ஜீரோ) மற்றும் மைனஸ் 40 (-40) மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட தேர்வில் தகுதி பெற்று, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில், நீட் முதுநிலைத் தேர்வில் முதல் 50 சதவீத இடங்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே தகுதியானவர்களாகக் கருதப்பட்டனர். அதாவது, 2 லட்சம் பேர் தேர்வு எழுதினால், முதல் 1 லட்சம் பேர் மட்டுமே தகுதி பெறுவார்கள்.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், தகுதிக்கான வரம்பு இருந்தது. ஆனால், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அதிகக் கட்டணம் கொண்ட முதுநிலை மருத்துவ இடங்கள், குறிப்பாக மருத்துவமல்லாத பாடப்பிரிவுகளில் காலியாக இருப்பதைத் தடுப்பதற்காக, தேசிய மருத்துவ ஆணையம் தகுதி மதிப்பெண்ணை (கட்ஆப்) படிப்படியாகக் குறைத்தது. இதன் உச்சகட்டமாக கடந்த 2023ல், தகுதி மதிப்பெண் 0% ஆகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம், தேர்வில் பங்கேற்ற அனைவரும், மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள் உட்பட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2024ல், தகுதி மதிப்பெண் 5% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் இடங்கள் கிடைத்தன. இந்த மாற்றம், தகுதியின் அடிப்படையில் மருத்துவர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளின் அனைத்து இடங்களையும் நிரப்புவதே முக்கிய நோக்கமாகிவிட்டதைக் காட்டுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு, மைனஸ் 40 (-40) மதிப்பெண் பெற்றவர் உட்பட, மொத்தம் 13 மாணவர்கள் தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மேலும் 800க்கு பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற 14 மாணவர்கள் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில், 2 லட்சத்திற்கும் அதிகமான ரேங்க் பெற்ற மாணவர்கள் கூட முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். உதாரணமாக, 2023ல் வெறும் 5 மதிப்பெண் பெற்ற மாணவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்-இல் தடயவியல் மருத்துவப் பிரிவில் சேர்ந்துள்ளார். கதிரியக்கவியல், தோல் மருத்துவம் போன்ற அதிக தேவை உள்ள பிரிவுகள் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குச் சென்றாலும், உடற்கூறியல், உயிர் வேதியியல் போன்ற மருத்துவமல்லாத பாடப்பிரிவுகளில் உள்ள இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தக் காலி இடங்களால் ஏற்படும் நிதி இழப்பைத் தவிர்ப்பதற்காகவே தகுதி மதிப்பெண் குறைக்கப்படுகிறது. இதன் மூலம், தேர்வில் அடிப்படைத் தகுதியைக் கூட எட்டாத மாணவர்கள், லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த முடிந்தால் போதும், முதுநிலை மருத்துவப் பட்டத்தைப் பெற்றுவிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.