Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருத்துவ மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வில் 699 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை: அமைச்சர் வழங்கினார்

சென்னை: அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்ட் 4ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். ஆகஸ்ட் 5ம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் ஆகியவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நேரடியாக நடந்தது. மாலையில் சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான சேர்க்கை ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அதன்படி, 494 எம்பிபிஎஸ், 119 பிடிஎஸ், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 67, விளையாட்டு வீரர்கள் பிரிவில் 8, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில் 11 பேர் என மொத்தம் 699 பேருக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டது. 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் விவசாயி, கூலி தொழிலாளி உட்பட ஏழை குடும்பத்தை சேர்ந்த 613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆவியூர் கிராமத்தை திருமூர்த்தி (நீட் மதிப்பெண் 572) என்ற மாணவருக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் (எம்எம்சி) கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* மகளுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்ற 49 வயது பெண்ணுக்கு சீட்

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் ஏராளமான மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். அதில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி (49) என்ற பெண் எம்பிபிஎஸ் படிப்பு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்துகொண்டார். அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து அமுதவல்லி கூறுகையில், ‘‘நான் பிசியோதெரபிஸ்டாக இருக்கிறேன். எம்பிபிஎஸ் படிக்க எனக்கு ஆசையாக இருந்தது. நீட் தேர்வுக்கு என் மகள் தயாராகி வந்தார். அவளின் புத்தகங்களை வைத்து நானும் படித்தேன். நீட் தேர்வில் நான் 147 மதிப்பெண்ணும், எனது மகள் 450 மதிப்பெண்ணும் எடுத்துள்ளோம். ஒரே குடும்பத்தில் முதல் முயற்சியிலேயே மருத்துவர் கனவு நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.