மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்: சென்னை மத்திய குற்றப்பிரிவு கடும் எச்சரிக்கை
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் இந்த காலகட்டத்தில், சில மோசடி கும்பல்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்கள், தங்களுக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தில் செல்வாக்கு இருப்பதாகவும், விரும்பிய கல்லூரியில் சுலபமாக இடம் வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் அணுகுகின்றனர். இதை நம்பி பல லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள், தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்த மோசடிகள் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், முக்கிய தகவல்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை, நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள், லட்சக்கணக்கான பணத்தை மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது.
சென்னை காவல் ஆணையர் அருண், மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்றும், மருத்துவ கல்லுாரியில் இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், அரசின் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலமும், கல்லுாரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொண்டு மட்டுமே மருத்துவ படிப்பிற்கான இடத்தினை ஆலோசனை செய்ய அறிவுரை வழங்கியிருக்கிறார்.
* புகார் அளிக்க தயங்க வேண்டாம்
யாரேனும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பணம் கேட்டால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக சைபர் க்ரைம் உதவி எண்ணான 1930க்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும், ஆன்லைன் மூலமாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்துள்ளது. பெற்றோர்களும், மாணவர்களும் இந்த முக்கியமான காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், எந்த ஒரு குறுக்கு வழியையும் நாடாமல், சட்டப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமான சேர்க்கை நடைமுறைகளை மட்டுமே பின்பற்றுமாறு சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.