சென்னை: எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கும் பணி நடந்து வருவதால், கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வின் மூலம் 50 முதல் 150 எம்.பி.பி.எஸ். இடங்களை சேர்க்க உள்ளன. இத்துடன், 4 நிகர்நிலை பல்கலைக் கழகங்களும் தலா 100 இடங்களை சேர்க்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் கூடுதலாக ஆயிரத்து 750 மருத்துவ இடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றாலும், கல்வியாளர்கள் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் உச்ச அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து வருகிறது. இதனால், மருத்துவ அறிவியல் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வுக் குழுவிடம் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு கோரியுள்ளது. மேலும், 2ம் கட்ட கலந்தாய்வை ஆக.29 முதல் தொடங்க தகுந்த அதிகாரம் கொண்ட குழு முடிவு செய்துள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன்பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,‘மாணவர் சேர்க்கை தாமதமாகும் போது, பாடத்திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க, படிப்பதற்கான விடுமுறைகள் மற்றும் பிற விடுமுறைகள் குறைக்கப்பட்டு, வகுப்புகள் அவசரமாக நடத்த நேரிடும். இறுதி ஆண்டு தேர்வுகள் தாமதமானால், முதுகலை படிப்பு சேர்க்கையிலும் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.