சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகிறது. இவைதவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1144 எம்பிபிஎஸ் இடங்கள், 515 பிடிஎஸ் இடங்கள், என்ஆர்ஐ இடஒதுக்கீட்டில் 592 எம்பிபிஎஸ் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 6ம் தேதி தொடங்கி 25ம் தேதியுடன் முடிந்தது. மொத்தம் 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 39,853 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 4,062 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றனர்.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் இன்று (ஜூலை 30) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம்.
ஆகஸ்ட் 5ம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இடஒதுக்கீடு விவரங்கள் ஆகஸ்ட் 6ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 11ம் தேதி மதியம் 12 மணி வரை இட ஒதுகீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.
அதேபோல், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் ஆகியவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு விளையாட்டு வீரர், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. மாலையில் சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான சேர்க்கை ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார். கலந்தாய்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு சுகாதாரத்துறை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.