Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3வது சுற்றுக்கு புதிதாக 650 எம்பிபிஎஸ் இடங்கள்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்

சென்னை: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கு 3ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 550 கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களையும், புதிய தனியார் மருத்துவப் பல்கலைக்கழகமான தக்‌ஷஷிலா மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும் அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 2025ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 9,950ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டுக்கான சேர்க்கையை தொடங்கியபோது, அரசுக் கல்லூரிகளில் 5,200 மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 4,000 என 9,200 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன. இந்தநிலையில் தேசிய மருத்துவ ஆணையம் முதல் சுற்றில் 100 இடங்களை அனுமதித்தது. பின்னர் மருத்துவக் கல்லூரிகள் 2வது மேல்முறையீட்டிற்குச் சென்ற பிறகு எம்.பி.பி.எஸ் இடங்கள் மேலும் அதிகரித்தது.

தக்‌ஷஷிலா கல்லூரியைத் தவிர, செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி, அன்னை மருத்துவக் கல்லூரி மற்றும் தாகூர் மருத்துவக் கல்லூரிக்கு தலா 100 இடங்களும், சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பனிமலர் மருத்துவக் கல்லூரி மற்றும் அருணை மருத்துவக் கல்லூரிக்கு தலா 50 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக 7.5% ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படுவதற்காக 30 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. 2ம் சுற்றின் முடிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களும் நிறைவடைந்த நிலையில், புதிதாக சேர்க்கப்பட்ட 650 இடங்கள் மூலம் மேலும் 30 அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் புதிய எம்.பி.பி.எஸ் இடங்கள் காரணமாக 3ம் சுற்று கலந்தாய்வுக்கு மொத்தமாக 1,518 எம்.பி.பி.எஸ் இடங்களும், 631 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன.