மருத்துவம், பொறியியல் நுழைவு தேர்வு பயிற்சி மையங்களுக்கு 18% ஜிஎஸ்டி தொடரும்: ஒன்றிய நிதி அமைச்சர் கைவிரிப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள பயிற்சி மையங்கள் கல்வி நிறுவனங்கள் அல்ல; அவை வர்த்தக நிறுவனங்களே என்பதால் அவற்றுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடரும் என ஒன்றிய நிதி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள தனியார் கல்வி பயிற்சி மையங்களுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் அல்லது முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டே பயிற்சி மையங்களின் நிர்வாகிகள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முறையிட்டனர். சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டுள்ள இந்தத் துறையின் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரியானது, மாணவர்களின் கல்விச் செலவை அதிகரிப்பதாகவும், குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில்;
பயிற்சி மையங்கள் என்பவை முறையான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைப் போல கல்வி நிறுவனங்களின் கீழ் வகைப்படுத்தப்படவில்லை. அவை முற்றிலும் வர்த்தக நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஆகும். எனவே, அவற்றுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது’ என்றார். வரும் 22ம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும் நிலையில், தற்போது நிர்மலா சீதாராமன் பயிற்சி நிறுவனங்களுக்கு சலுகை காட்டமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, உதாரணமாக 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கொண்ட ஒரு பயிற்சி வகுப்பிற்கு, மாணவர்கள் கூடுதலாக 9 ஆயிரம் ரூபாயை வரியாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த கூடுதல் வரிச்சுமை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் உயர்கல்விக் கனவை பாதிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆய்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 27 சதவீத மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை சார்ந்துள்ளனர். அதேசமயம், இந்த வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், வர்த்தக நிறுவனங்களுக்கும், லாப நோக்கமற்ற கல்வி நிறுவனங்களுக்கும் இடையே வேறுபாட்டை அரசு வரையறுத்துள்ளதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.