Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருத்துவத்துறையில் கடந்த 4.5 ஆண்டுகளில் 33,987 பணிநியனமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், பொது சுகாதாரத்துறையில் ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கும், உணவு பகுப்பாய்வு கூடங்களில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கும், ஆய்வக தொழில்நுட்புநர் பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பிறகு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது என்பது தொடர்ந்து மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் 644 பணியிடங்களுக்கு பணி ஆணைகள் தரப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னாள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட ஆய்வக தொழில் நுட்புநர்கள் 42 பேருக்கு பணிவரன்முறை ஆணைகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை நிரந்தரப் பணிகளாக மாற்றப்பட்டு பணியமர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடம் 15 காலிப்பணியிடங்களாக இருந்தது, அதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக விண்ணப்பம் பெறப்பட்டு தேர்வு நடத்தி அதில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் இன்று பணிஆணைகள் வழங்கப்பட்டது.

ஆய்வக தொழில்நுட்பவியர் நிலை-2 பணியிடத்திற்கு 3 காலிப்பணியிடங்கள் இருந்தது, அந்த காலிப்பணியிடங்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் இன்று பணிநியமன ஆணைகள் தரப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடம் 15 நபர்களுக்கும், ஆய்வக தொழில் நுட்புநர் நிலை- 2 பணியிடங்கள் 3 நபர்களுக்கும் ஆக மொத்தம் 18 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 42 ஆய்வக தொழில் நுட்புநர்களுக்கு பணிவரன்முறை ஆணைகள் தரப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் 4 ஆண்டுகளில் பணிநியமனங்கள்

இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையில் ஒவ்வொரு பணிநியமனங்களும் மிக நேர்மையான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலமாக இதுவரை 7,823 பேருக்கு பணிநியமன ஆணைகள் தரப்பட்டுள்ளது. மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இளநிலை பகுப்பாய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், ஆய்வக நுட்புநர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சரால் 7,823 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 281 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

3,009 பேர் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 3,653 தற்காலிக செவிலியர்களுக்கு நியமன செவிலியர்களாக பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு, 2011 புதிய பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தேசிய நலவாழ்வு குழுமம் மூலமாகவும், மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் மூலமாகவும் 14,272 பேருக்கு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராமப் புற செவிலியர்கள் (ANM), செவிலியர்கள், பல் மருத்துவ உதவியாளர்கள் போன்ற பல்வேறு பணிடங்களுக்கு பணி ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் 2832 பேருக்கு பணி ஆணைகள் தரப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக தமிழ்நாட்டில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைத்தார்கள். அதற்கு மட்டுமே மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் என்று 506 பேர் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆக மொத்தம் 33,987 பேருக்கு பணி நியமன ஆணைகள் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு வழங்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இந்த துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணிமாறுதல் ஆணைகளும் தொடர்ச்சியாக தரப்பட்டுள்ளது. இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 43,755 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கிராம சுகாதார செவிலியர் (VHN) 2,250 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது, அந்த வழக்குகளை எல்லாம் மூத்த வழக்கறிஞர்கள் மூலம் எதிர்கொண்டு அதற்கான தீர்ப்பு கடந்த 15 நாட்களுக்கு முன்னால் பெறப்பட்டு, 2250 கிராம சுகாதார செவிலியர்களில் அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு பணி ஆணைகள் தரலாம் என்கின்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது. ஆக இந்த 2250 பேரில் 1,231 பேருக்கு பணி ஆணைகள் தருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர் விரும்பும் இடங்களிலேயே பணி ஆணைகள் தரப்பட உள்ளது. வருகின்ற 22.09.2025 காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கில் 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்க உள்ளார்கள். மீதமுள்ள கிராம சுகாதார செவிலியர்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர் குழு

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் குறுகிய காலத்திற்கான ஊடுகதிர் (Xray) எடுத்து அதனை செயற்கை நுண்ணறிவு AI மூலம் ஆராய்ந்ததில் அதில் காசநோய் இருப்பது என்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய mammogram போன்ற சிறிய அளவிலான செயற்கை நுண்ணறிவு மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே சென்னையில் இருக்கின்ற இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, பெரியார் அரசு மருத்துவமனைகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் திட்டம் பரிட்சார்த்த ரீதியில் செயல்படுத்தப்பட்டது. தற்போது இதனை மேலும் விரிவுப்படுத்துகின்ற வகையில் AI தொழில்நுட்பத்தின் பயனை இத்துறையில் அதிகரிக்கின்ற வகையில் குழு ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில்

1. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர்,

2. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்,

3. தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர்,

4. தேசிய நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குநர், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர்,

5. மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர்,

6. பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர்,

7. மாநில காசநோய் அலுவலர், கண் மருத்துவ பேராசிரியர்,

8. கதிரியக்கவியல் துறை பேராசிரியர் போன்ற 20 மருத்துவ வல்லுநர்களை இந்த குழுவில் இந்த துறை நிர்ணயித்திருக்கிறது.

இந்தக் குழு AI தொழில்நுட்பத்துடன் எந்தமாதிரியான மாற்றங்களை கண்டறிந்து இத்துறையில் செயல்படுத்தலாம் என்கின்ற அறிக்கையினை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தை இத்துறையில் முழுமையாக செயல்படுத்தப்படும்.

நாய்க்கடி, பாம்புக்கடி தொடர்பான கேள்விக்கு

தமிழ்நாட்டில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றது. கடந்த காலங்களில் நாய்க்கடி, பாம்புக்கடி என்று வந்தால் மருந்துகள் என்பது எங்கேயும் இருக்காது. இந்த மருந்துகள் பொதுவாக வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் தமிழ்நாட்டில் முதன்முறையாக 3 ஆண்டுகளுக்கு முன்னாள் நாய்க்கடிகள், பாம்புக்கடிகள் அதிகமாக கிராமப்புறங்கள், குக்கிராமங்கள், மலைக் கிராமங்களில் ஏற்படுவதால் கிராமப் பகுதிகளில் உள்ள மருத்துவக் கட்டமைப்பான ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கான ASV என்கின்ற மருந்தும், நாய்க்கடிக்கான ARV என்கின்ற மருந்தும் கையிருப்பு வைக்கப்பட்டு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

அந்தவகையில் இன்று 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தற்போது புதிதாக தொடங்கப்பட்ட 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தெருநாய்கள் பிரச்சினை அதிகமாக இருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு துணை முதலமைச்சரின் தலைமையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, நாய்க்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பல பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் லால்வேனா, இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் மரு.தேவபார்த்தசாரதி, துணை இயக்குநர் மரு.சித்ரசேனா மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.