மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லாத பணி நியமனம் நிராகரிப்பு; இறுதி பட்டியலை எதிர்த்த 400 டாக்டர்கள் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக் கூறி அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த பட்டியலில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் 2024 ஜூலை 15ம் தேதிக்கு முன் பதிவு செய்யவில்லை எனக் கூறி 400 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதை எதிர்த்து மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுக்களில், 2024 ஜூலை 15ம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தோம். ஆனால் பதிவு கிடைக்கவில்லை. இதனால், தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து அரசு உதவி மருத்துவர் தேர்வுக்கு விண்ணப்பித்தோம். சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்ததால் நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற முடியதாததற்கு பல்கலைக்கழகம் தான் காரணம். எனவே, தங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இறுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணை வந்தது. அப்போது, மருத்துவர் தேர்வு வாரியம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, குறிப்பிட்ட கட் ஆப் தேதிக்குள் மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு பெற்றவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள். உரிய விதிகளுக்கு உட்பட்டுத்தான் பணி நியமன நடைபெற்றுள்ளது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.