Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்டுள்ளது; மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணம் இல்லை: மல்லை சத்யா பரபரப்பு அறிக்கை

சென்னை: மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணம் இல்லை என்று மல்லை சத்யா கூறியுள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா இன்று வெளியிட்ட அறிக்கை: மதிமுகவில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை. கடந்த மாதம் 9ம் தேதி வைகோவின் பேட்டியில் தமிழிழத் தாயகத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனுக்கு புலிப் படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு (வைகோ) மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டு பேசினார். என் அரசியல் பொதுவாழ்க்கையில் வைகோவுக்கு எதிராக நான் சிந்தித்தேன் செயல்பட்டேன் என்பது உண்மையானால், இறந்து போயிருப்பேன்.

வைகோ தன் மகன் துரை எம்பியின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தன்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து பணியாற்றி வந்தேன். என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்டதில் இருந்து என்னால் தூங்க முடியவில்லை. அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் வைகோ, வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாம் அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேன். வைகோவின் அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லவா தங்களுக்கு கிடைத்தது. வேதனையில் துடிக்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும், எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம்.

அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக சுயமரியாதை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கின்றேன். கவலைப்பட வேண்டாம் இந்த சோதனையான காலகட்டத்தை கடந்து வருவேன். கடந்த 4 நாட்களாக நான் எதுவும் பேசாமல் மெளனம் காத்து வந்தேன். காரணம் நான் மதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இப்போது வரையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து வந்துள்ளேன். இந்தநிலையில், என்மீது மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பொதுவெளியில் விமர்சித்து பேசியுள்ளார். பதில் சொல்ல வேண்டிய ஜனநாயக கடமை எனக்கு உண்டு.

நீ பேசாத வார்த்தைக்கு நீ எஜமான். நீ பேசிய வார்த்தைக்கு நீ அடிமை. என் மெளனத்தைக் கலைக்கின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். என்றும் மறுமலர்ச்சிப் பாதையில். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.