Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​புகளு​க்​கான 3ம் சுற்றில் இடம் கிடைத்து படிக்க விரும்பாமல் வெளியேற நினைத்தால் அபராதம்

சென்னை: தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரிகளில் உள்ள அரசு, நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான கலந்​தாய்வை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்​துகிறது. அதன்​படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இதுவரை 2 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 2ம் சுற்றில் இடம் கிடைத்தவர்கள் தற்போது கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர். செப்டம்பர் 30ம் தேதிக்குள் இடம் கிடைத்தவர்கள் சேர்க்கை பெற வேண்டும்.

முதல் 2 சுற்றுகளில் இடம் கிடைக்காதாவர்கள் மூன்றாம் சுற்றில் பங்கேற்கலாம். மேலும் 2ம் சுற்றில் இடம் கிடைத்து, அதை மாற்ற விரும்புபவர்களும் 3ம் சுற்றில் பங்கேற்கலாம். மூன்றாம் சுற்றில் ப்ரீ எக்ஸிட் எனப்படும் வெளியேறுதல் வாய்ப்பு இல்லை. இதில் கிடைத்து சேர்க்கை பெறாவிட்டால், அடுத்து நடக்கும் காலியிட சுற்று அல்லது 4ம் சுற்றில் பங்கேற்க அனுமதி இல்லை. அதேநேரம் 3ம் சுற்றில் இடம் கிடைத்து, சேர்க்கை பெற்றபின் கல்லூரியில் படிக்க விரும்பாமல், வெளியேற நினைத்தால் அபராதம் செலுத்த வேண்டி வரும்.

இடைநிற்றல் கட்டணம் ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் கல்வி கட்டணம், பாதுகாப்பு வைப்புத்தொகை திருப்பி தரப்படாது. தமிழக கவுன்சலிங்கில் இரண்டாம் சுற்று முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பொதுப்பிரிவு மேனேஜ்மெண்ட் இடங்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.

யாரேனும் சேர்க்கை பெறவில்லை என்றால், அந்த இடங்கள் மூன்றாம் சுற்றுக்கு வரும். அதேநேரம் சிறுபான்மையினர் ஒதுக்கீட்டு பிரிவில் மலையாளம் பிரிவில் 6 இடங்களும், என்.ஆர்.ஐ பிரிவில் 366 இடங்களும் என 372 இடங்கள் காலியாக உள்ளன. ஒருவேளை இந்த இடங்கள் மூன்றாம் சுற்றில் நிரப்பப்படவில்லை என்றால், அவை பொதுப்பிரிவு மேனேஜ்மெண்ட் இடங்களாக மாற்றப்படும்.

இந்த இடங்​களுக்​கான மூன்​றாம் கட்ட கலந்​தாய்வு அக்​.6ம் தேதி ஆன்​லைனில் தொடங்​க​வுள்​ளது. இந்தச் சுற்று, மருத்துவப் படிப்பை எப்படியாவது உறுதி செய்ய விரும்பும் மாணவர்களுக்கு ஒரு கடைசி மற்றும் முக்கியமான வாய்ப்பு ஆகும். அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக வசூலிக்​கும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்று அரசு அறி​வித்​துள்​ளது என்பது குறிப்பிடத்தக்கது.