ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் போபாலின் ஐஷ்பாக் பகுதியில் சமீபத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வளைவு பகுதி 90 டிகிரி கோணத்தில் கூர்மையாக இருந்ததால் வாகன ஓட்டிகள் வளையும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்து நடக்க வாய்ப்புள்ளதாக இணையதளத்தில் விமர்சனங்களும் கேலி கிண்டல்களும் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை மபி அரசு கருப்பு பட்டியலில் வைத்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி கட்டுமான நிறுவனம் சார்பில் மபி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், கட்டப்பட்ட மேம்பாலத்தின் வளைவு பகுதி 90 டிகிரி கோணத்தில் இல்லை எனவும் 118 முதல் 119 டிகிரி கோணத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய மபி அரசு கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement