சிவகாசி: சிவகாசி அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் தமிழரசன்(23). கூலி வேலை செய்து வந்தார். இவரும் அருகே உள்ள செவலூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தமிழரசன் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல், தமிழரசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் தமிழரசன் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை சிவகாசி சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த 6 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், அவர்கள் எம்.புதுப்பட்டியில் தமிழரசனை கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் செவலூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி, மணிகண்டன், ஜெயசங்கர், முத்துப்பாண்டி, ரஞ்சித் குமார், செல்வம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் திருத்தங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், பெண்ணை காதலித்ததால் தமிழரசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை அருகே பெண்ணை காதலித்த வைரமுத்து என்ற வாலிபரை பெண்ணின் சகோதரர் வெட்டி கொன்ற நிலையில், சிவகாசியிலும் அதேபோல் நடந்த கொலையால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.