மயிலாடுதுறை: மயிலாடுதுறை இளைஞர் வைரமுத்து கொலை விவகாரத்தில் காதலியின் தாய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மற்றும் மாலினி கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், காதலுக்கு மாலினியின் தாய் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. தாயை மீறி மாலினி, வைரமுத்து வீட்டில் குடியேறிய நிலையில், இருவருக்கும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்ய உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வைரமுத்துவை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கியது.
இதில் வைரமுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வைரமுத்துவின் உறவினர்கள் மற்றும் மாலினி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கலைந்து சென்ற உறவினர்கள் மயிலாடுதுறை மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் வரை, வைரமுத்துவின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். வைரமுத்துவின் தாயார் ராஜலெட்சுமி அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.இளைஞர் கொலை தொடர்பாக மாலினியின் சித்தப்பா பாஸ்கர், சகோதரர்கள் உள்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மாலினியின் தாயார் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.