டெல்லி: 'நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அது மறக்க வேண்டிய ஒரு விஷயம்' என வழக்கறிஞர் தாக்குதல் முயற்சி குறித்து தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தது. அப்போது, 71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், திடீரென காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார். அதற்குள் உஷாரடைந்த நீதிமன்ற காவலர்கள், உடனடியாக பாய்ந்து சென்று வழக்கறிஞரை தடுத்து நிறுத்தினர்.
அவர் வீச முயன்ற காலணி தலைமை நீதிபதி மீது படாமல் கீழே விழுந்தது. காலணியை வீசிய உடனே, கிஷோரை கைது செய்த காவலர்கள், அவரை வெளியே அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் தலைமை நீதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கூறிய நிலையில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் விடுவிக்கப்பட்டார். எனினும், இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து இன்று தலைமை நீதிபதி கவாய் கூறுகையில்; திங்கட்கிழமை நடந்ததைக் கண்டு நானும் என்னுடன் அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களைப் பொறுத்தவரை இது மறக்க வேண்டிய ஒரு விஷயம்” என்று தெரிவித்துள்ளார். இந்த அமர்வில் இருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான் கூறுகையில், ''இந்த தாக்குதல் முயற்சி குறித்து எனக்கு எனது சொந்தக் கருத்துக்கள் உள்ளன. அவர் இந்தியாவின் தலைமை நீதிபதி; இது நகைச்சுவைக்கான விஷயம் அல்ல,'' என்றார். இது அமைப்புக்கு (உச்ச நீதிமன்றத்துக்கு) ஏற்பட்ட அவமானம்” என தெரிவித்தார்.