மேட்ரிமோனி மூலம் பழகி பல பெண்களை சீரழித்த வாலிபர் வட்டாட்சியர் முன் ஆஜர்: போலீசார் பிடியில் இருந்துஓடியபோது கால் முறிந்தது
அண்ணாநகர்: மேட்ரிமோனி மூலம் பழகி பல பெண்களை சீரழித்த வாலிபரை விசாரணைக்காக வட்டாட்சியர் முன் ஆஜர்படுத்தினர். முன்னதாக அவரை கைது செய்து அழைத்துவரும்போது போலீசார் பிடியில் இருந்து தப்பியோடியதால் கால் முறிந்தது. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’தமிழ் மேட்ரிமோனி மூலம் சூர்யா என்பவர் தனக்கு அறிமுகமாகி பின்னர் என்னை திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்து உல்லாசம் அனுபவித்தார்.
இதன்பிறகு இருவரும் சேர்ந்து நிலம் வாங்கலாம் என்று கூறி என்னிடம் இருந்து 8 லட்ச ரூபாய் மற்றும் 9 சவரன் நகை, லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை வாங்கினார். இதன்பிறகு தன்னை திருமணம் செய்வதற்கு மறுத்துவிட்டார். எனவே, சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சூர்யாவை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தனர். அப்போது அவர், சிறுநீர் கழிக்கவேண்டும் என்று கூறியதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர். அப்போது அவர் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். இதன்பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவிட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், நேற்று புழல் சிறையில் இருந்து சூர்யாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அமைந்தகரை வட்டாட்சியர், நிர்வாகசெயல்துறை நடுவர் ஆகியோர் சூர்யாவிடம் நன்னடத்தை பத்திரம் என்றால் என்ன தெரியுமா? என்று கேட்டு அவருக்கு படித்து காண்பித்து இதன்படி வாழவேண்டும் என்று எச்சரித்தனர். இதன்பின்னர் மீண்டும் சூர்யாவை புழல் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக இதுசம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் மேட்ரிமோனி மூலம் பல பெண்களை சூர்யா சீரழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையிலும் அவரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. முன்னதாக சூர்யாவை ஆஜர்படுத்தியபோது அவரிடம் வட்டாட்சியர், ‘’நன்னடத்தை பத்திரம் வழங்கப்படும். அந்த பத்திரத்தின்படி ஒழுங்காக இருக்கவேண்டும். இவற்றை மீறி மீண்டும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன் நன்னடத்தை பத்திரத்தில் சூர்யா கையெழுத்து போட்டதுடன் அந்த நன்னடத்தை பத்திரத்தை வட்டாட்சியர் படித்து காட்டினர். நன்னடத்தை பிரமான பத்திரம் மூலம் இளம்பெண்களுக்கு நேரடியாகவோ வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ மின்னணு சாதனங்கள் மூலமாகவோ அல்லது மூன்றாம் நபர் மூலமாகவோ தொடர்புகொள்ள முயற்சி செய்யகூடாது என்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடு மற்றும் வேலை செய்யும் அலுவலகத்துக்கு செல்லகூடாது என்றும் இணையதளத்தில் பின்தொடரவோ கூடாது என்று எச்சரித்தனர். இவற்றை மீறினால் 3 ஆண்டு சிறைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றனர்.