Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

3வது டி20 போட்டியில் இன்று மிரட்டும் தெ.ஆ.வை? விரட்டுமா இந்தியா: மார்க்ரம் சூர்யா மல்லுக்கட்டு

தர்மசாலா: இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை சுவைத்துள்ள நிலையில், தர்மசாலாவில் இன்று 3வது டி20 போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் திறன் ரசிகர்களை கவலை அடையச் செய்து வருகிறது. சமீப போட்டிகளில் சொற்ப ரன்களில் அவர் வீழ்வதால் அணியின் வெற்றி விகிதம் குறையத் துவங்கி உள்ளது. கழுத்து சுளுக்கால் ஒரு மாதம் ஆடாமல் மருத்துவ சிகிச்சை பெற்று, தற்போது மீண்டும் டி20 போட்டியில் சுப்மன் கில் ஆடத் துவங்கி உள்ளார். அவரது பேட்டிங்கிலும் முன்பு போல் எழுச்சியை காண முடியவில்லை.

சிறப்பாக ஆடிவரும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டன் கில் இன்று மீண்டும் ஃபார்முக்கு திரும்பினால் ரசிகர்கள் முகத்தில் புன்னகையை பார்க்க முடியும். தென் ஆப்ரிக்காவின் பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நார்ட்ஜே, மார்கோ யான்சன், லுங்கி நிகிடி, ஓட்நீல் பார்ட்மேன், லூதோ சிபம்லா, இந்திய சூழலில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை நமக்கே பாடம் எடுத்து மிரட்டி வருகின்றனர்.

இன்று போட்டி நடக்கும் தர்மசாலா மைதானம், பந்து எழும்பக்கூடியதாக இருக்கும் என்பதால், போட்டி சுவாரசியம் மிக்கதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இரு அணிகளை ஒப்பிடுகையில், தென் ஆப்ரிக்க வீரர்களின் பலம் சற்று அதிகரித்துள்ளது போல் காணப்படுகிறது. அந்த அணியின் குவின்டன் டி காக் அதிரடி ஃபார்முக்கு திரும்பியுள்ளது அவர்களுக்கு பலம். அதேபோல், அய்டன் மார்க்ரம், டெவால்ட் புரூவிஸ், டொனோவான் பெரேரா, டேவிட் மில்லர், மார்கோ யான்சன் உள்ளிட்டோரின் பேட்டிங் லைன் அட்டகாசமாக உள்ளது.

அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, இந்திய அணி ஆடுவதற்கு இன்னும் 8 போட்டிகளே உள்ளன. எனவே, இனியொரு தோல்வியை இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீரால் எண்ணிக் கூட பார்க்க இயலாது. இன்றைய போட்டியில் 3வது விக்கெட்டுக்கு அக்சர் படேலை அனுப்பாமல், சூர்யகுமார் சென்று அடித்து ஆட வேண்டும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். 2வது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை களைந்து இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கலாம்.