Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மொழிகளில் முதன்மை

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ் மொழியை சிதைக்கும் போக்கை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழின் தொன்மை காக்கப்பட வேண்டுமென்று முதல்வரோடு, தமிழக மக்களும் கைகோர்த்துள்ளனர். இருமொழிக் கொள்கையை வேரறுக்க முயலும் ஒன்றிய அரசுக்கு எதிராக தென்மாநிலங்களும் அணி திரண்டு வருகின்றன. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை ஒன்றிய பாஜ அரசு மூடி மறைக்க முயல்வது இது ஒன்றும் புதியதல்ல. கடந்த 2015ம் ஆண்டு கீழடியில் ஒன்றிய அரசு சார்பில்தான் முதல்கட்ட அகழாய்வு தொடங்கியது. 3 கட்ட அகழாய்வை நடத்திய பின்னர், தமிழர்களின் நகர நாகரீகமே சுமார் 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்டது, அலங்காரம், கட்டுமானம் உள்ளிட்ட பல தொழில்களின் முன்னோடியாக தமிழர்கள் திகழ்ந்தது அகழாய்வில் வெளிப்பட்டது. தமிழர்களின் கலாச்சாரமே தொன்மையானது என்ற உண்மையை, பாஜ அரசால் ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான்... அகழாய்வுப்பணிகளை குழி தோண்டி புதைத்தது.

அதன்பின்னர் நடந்த 7 கட்ட அகழாய்வுகளையும் தமிழக அரசே ஏற்று நடத்தியது. நம் பாரம்பரியத்தை உலக மக்கள் அறிய பல கோடி செலவில் அருங்காட்சியகம் அமைத்தது. தற்போது திறந்தவெளி அருங்காட்சியக முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் அறிவியல் - மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனம், இந்திய வன உயிர்க்கல்வி நிறுவனம் இணைந்து மொழி பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதில் நம் தாய்மொழி தமிழ் உட்பட 82 மொழிகளை கொண்ட திராவிட மொழிக்குடும்பமே பழமையானதாக குறிப்பிட்டுள்ளது. அதில் முதுமொழியாக தமிழை குறிப்பிட்டுள்ளது. சுமார் 4,500 ஆண்டுகள் மிகப்பழமைமிக்க மொழியாகவும் கூறியுள்ளது. தமிழர்களின் வரலாறு பழமையானது என்பதற்கு கல்வெட்டுகள் சாட்சியமளிக்கின்றன.

தனது வரலாறு, வாழ்வியலை பிற்கால தலைமுறை பின்பற்றி வாழ வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே கல்வெட்டில் செதுக்கி சான்றளித்துள்ளான் தமிழன். ஈரடியில் உலக பொதுமறையை மிகுந்த பொருளுடன் உலகுக்கு உணர்த்திய திருக்குறள் ஒன்று போதாதா? உலக அளவில் சுமார் 9 கோடி பேர் வரை தமிழ் மொழியை பேசி வருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. தமிழ் மொழியின் தொன்மை வரலாறு, பாடல்கள், நூல்கள், இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவர்கள், இன்று உலகளவில் திறமையானவர்களாக ஜொலிக்கின்றனர். இருமொழி கொள்கையாக நம் தாய்மொழியோடு ஆங்கில மொழியையும் சேர்த்து தமிழர்கள் கற்றதாலேயே, கல்வியிலும் ஜொலிக்கின்றனர். உலகின் முக்கிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று முன்னேற்றப்பாதையில் திகழ்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை வெற்றிகரமான கல்விக்கொள்கையாக இருமொழிக் கொள்கையே திகழ்கிறது. இதில் 3வது மொழியாக இந்தியை திணித்தால் கல்வி நிலையில் குழப்பம் ஏற்படும். மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாநில அளவில் முன்னேற்றப்பாதையில் செல்லும் கல்வி முறையில், அம்மாநில மொழியை இருட்டடிப்பு செய்வது சரியல்ல. தாய்மொழியில் சிறந்தவர்களே, ஒரு மாநிலம் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற முடியும். சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் தாய்மொழிக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆகையால்தான் அவை வளர்ச்சிப்பாதையில் பயணிக்கின்றன. எனவே, மொழிரீதியாக மாநிலத்தில் குழப்பம் விளைவிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென்பதே தமிழறிஞர்கள், தமிழ் மக்களின் விருப்பமாகும்.