40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் தமிழகத்தை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது: கோவில்பட்டியில் போலீசார் மடக்கினர்
கோவில்பட்டி: தமிழகத்தை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 4 வழிச்சாலையில நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி, அதிலிருந்த 2 பேரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காக்கூர் யாதவர் தெருவை சேர்ந்த சாந்தகுமார் (30), மதுரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி ரோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் (28) என்பதும், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் மேற்கு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் குறித்து போலீசார் கூறுகையில், ‘சாந்தகுமார், தற்போது மதுரை ஆனையூர் விண்வெளி நகர் பகுதியில் குடியிருந்து வந்தார். இவரது நண்பர் சிவகுமார். இவர்கள், காரில் சென்று வீடுகளை நோட்டமிடுவது, ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து இரவு நேரத்தில் கொள்ளையடிப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.
எப்போதுமே முகமூடி அணிந்தும், கையுறை அணிந்தும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்றனர். மேலும், கொள்ளையடிக்கும்போது எதுவும் சிக்கவில்லை என்றால், ஆத்திரத்தில் அந்த வீட்டின் கதவு, டிவி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி சென்று விடுவார்கள்’ என்பதும் தெரியவந்துள்ளது.
இருவரையும் போலீசார் கைது செய்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார், டூல்ஸ் மற்றும் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் பாராட்டினர்.


