ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளான புலிகள், யானைகள், சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் மற்றும் பல்வேறு வகையான மான்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. யானை, மான் மற்றும் காட்டு மாடுகள் சாதாரணமாக சாலையோரங்களில் பார்க்க முடியும். சிறுத்தை மற்றும் புலி ஆகியவற்றை பார்ப்பது மிகவும் அரிது.
இந்நிலையில், நேற்று மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் புலி ஒன்று கம்பீரமாக சாலையை கடந்து சென்றது. இதை, அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்று வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.