*சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், குழு உறுப்பினர்கள் அம்பேத்குமார், அருண்குமார், ராம.கருமாணிக்கம், சின்னதுரை, வெங்கடேஸ்வரன், முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சுற்று பயணம் மேற்கொண்டு தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.86 கோடி மதிப்பில் கட்டி முடிக்கபட்டுள்ள 70 குடியிருப்பு வீடுகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.10.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 3 குடியிருப்பு வீடுகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில், முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகளையும், மாவட்ட பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய், குடிநீர் பணிகள், சிமெண்ட் சாலை பணிகளையும், ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25.45 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு பணிகளையும், சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், மசினகுடி மாயார் முகாம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து, கோரிக்கைகள் கேட்டறிந்து மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்கள்.
அதனைதொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிங்காராவில், உள்ள பைக்காரா இறுதி நிலைய புனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வுகளின் போது, கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கெளர், மின்னியல், பைக்காரா இறுதிநிலை நீர் மின் உற்பத்தி நிலையம் (மசினகுடி) செயற்பொறியாளர் பாலாஜி, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சலீம், சுப்ரமணி உட்பட பலர் உடனிருந்தனர்.