ஊட்டி : மசினகுடி - மாயார் சாலையில், சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் சாய்ந்த படி நின்று கொண்டிருந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.
இவைகள் பகல் நேரங்களிலேயே சில சமயங்களில் சாலைகளில் அல்லது சாலை ஓரங்களில் உலா வருவதால் அவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் இவைகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.இந்நிலையில், மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில், சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு கரடி மரத்தில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தது. மேலும், அது மரத்தில் தனது உடலை தேய்த்துக்கொண்டும், அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தது.
இதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.