Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மசாலாப் பொருட்கள் கொடுக்கும் மகத்தான மருத்துவம்!

நவீன வாழ்க்கையில் மனித இனத்திற்கு பெரும் சவாலாக இருப்பது உடல் எடை அதிகரிப்பும், அதன் மூலம் ஏற்படும் சிரமங்களும்தான். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. எடைக் குறைப்பில் உடற்பயிற்சியை விட உணவு முறை முதன்மையான பங்களிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சில மசாலா பொருட்கள் எடை குறைப்பதற்கு உதவுகின்றன. அவற்றைப்பற்றி விரிவாக காண்போம்.

லவங்கப்பட்டை: அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை லவங்கப்பட்டை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பசியை அடக்குகிறது. உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பைக் குறைக்கிறது. சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

சோம்பு: பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு நார்ச்சத்து நிறைந்தது. இது வைட்டமின்களையும், தாது உப்புக்களையும் உடல் உறிஞ்சுவதற்கு உதவும். உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ஒரு தேக்கரண்டி சோம்பை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைக்கவும். இந்த தண்ணீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறி உடல்எடை குறையும்.

ஏலக்காய்: இனிப்பு மற்றும் தேநீரில் சேர்க்கப்படும் ஏலக்காய், நறுமணத்தை தருவதோடு, உடல் எடை குறைப்புக்கும் உதவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது. குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள மூலக்கூறுகள் குடலில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. அமில, கார சமநிலையை உண்டாக்குகின்ற செரிமானத்திக்கு வழிவகுக்கின்றன.

மிளகு: மிளகில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, தாதுக்கள் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இயற்கையான ஊக்கியாக செயல் படுகிறது. இதில் உள்ள தெர்மோ ஜெனிக் தன்மை தேவையற்ற கலோரிகளையும், கொழுப்பையும் எரிக்கும்.

மஞ்சள்: மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எடைக் குறைப்பிலும் முக்கிய பங்கு வகுக்கிறது. இதில் உள்ள குர்குமின் உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல் எடை அதிகரிக்காமலும் தடுக்கிறது.

வெந்தயம்: நார்ச்சத்து நிறைந்த வெந்தயம் அளவுக்கு அதிகமாக உஷ்ணத்தை தடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கிறது. வெந்தயத்தில் உள்ள நீரில் கரையும் தன்மை கொண்ட மூலக்கூறுகள், கொழுப்பு, மூலக்கூறுகள் அழிக்கும் ஆற்றல் பெற்றவை.இவற்றைத் தவிர சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி போன்றவற்றிக்கும் உடல் எடையைக் குறைக்கும் தன்மை உண்டு.

பிரியாணி இலை: இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது. பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

அன்னாசிப் பூ: அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர்ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்து. தாய்ப்பாலை பெருக்கக் கூடிய அற்புத சக்தி உடையது. அதிக சத்துக்கள் உள்ள இது, புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும்.

கிராம்பு: செரிமானத்திற்கு உதவும். மேலும், இது மூட்டுவலிக்கு வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் பயனுள்ளதாக இருக்கும். கிராம்பு, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளை குணப்படுத்துகிறது. சிறிது இந்து உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

சீரகம்: இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகைக்கு இது நல்லது. சீரகம் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் நன்மை பயக்கும், ஏனெனில் இது இரத்த நாளங்களை தளர்த்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சீரகத்தை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம், அஜீரணம் மற்றும் வாயு போன்ற செரிமானக் கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.

- அ.ப.ஜெயபால்.