தியாகி இமானுவேல்சேகரன் 68ம் ஆண்டு நினைவு தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை இமானுவேல் சேகரன் பிறந்த ஊரான செல்லூர் கிராமம் சார்பாக கிராமத்தலைவர் விஜயராமு, இளைஞர் சங்கத்தலைவர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மகளிர் மன்ற நிர்வாகிகள் உட்பட கிராம மக்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பாக அவரது மகள் சுந்தரி பிரபாராணி தலைமையில், குடும்பத்தினர் ரமேஷ்குமார், கோமகன், சந்திரசேகர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
காலை 9 மணிக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி சந்தீஷ் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பெரியகருப்பன், கயல்விழி செல்வராஜ், ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், டெல்லி பிரதிநிதி ஏ.கே.விஜயன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பாக மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் மாநில இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏக்கள் சதன் பிரபாகர், முத்தையா, முன்னாள் எம்பி நிறைகுளத்தான் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பாஜ சார்பாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, கருப்பு முருகானந்தம், தமாகா சார்பில் எஸ்சி எஸ்டி அணி செயலாளர் ராம்பிரபு, பாமக சார்பாக மாநில பொருளாளர் சையது மன்சூர், தேமுதிக சார்பாக மாநில பொருளாளர் சுதீஷ், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தவெக சார்பாக பொதுச்செயலாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுவன தலைவர் சீமான், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, எம்எல்ஏ பனையூர் பாபு மரியாதை செலுத்தினர்.
அதிமுக உரிமை மீட்பு குழு (ஓபிஎஸ்) சார்பில் மேலவை உறுப்பினர் தர்மர், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், அமமுக சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், புதிய தமிழகம் கட்சி சார்பில் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தனர்.
* விரைவில் மணிமண்டபம் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் உறுதி
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சமூக நீதிக்காக தியாகி இமானுவேல்சேகரன் அரும்பாடுபட்டவர். அவரின் புகழ் என்றென்றும் ஓங்கி நிற்கட்டும். அவர் வாழ்நாள் முழுவதும் சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டார். அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க பரமக்குடி நகராட்சி பகுதியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க ரூ.3 கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். நினைவு மண்டப பணி 95 சதவீதம் முடிந்து விட்டது. திருவுருவச் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணி முடிந்ததும் இரண்டு மாதங்களுக்குள் நினைவு மண்டபம் திறந்து வைக்கப்படும். அவரின் சமூக நீதி, சமூக நல்லிணக்கம் பணியை இன்றைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.
* டிடிவி, ஓபிஎஸ், தவெக பிளக்ஸ் போர்டுகள் கிழிப்பு
அரசியல் கட்சி பிரமுகர்களை வரவேற்பதற்காக பரமக்குடி நகர் முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பிளக்ஸ் போர்டுகளில் டிடிவி தினகரனின் அமமுக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி, ஓபிஎஸ் ஆதரவு பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவை கிழிக்கப்பட்டிருந்தன. சுமார் 50க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.