Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரே நாளில் 100 திருமணம்: விசாகத்தையொட்டி பாதயாத்திரையாக குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி முகூர்த்தத்தையொட்டி நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடந்தன. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இக்கோயிலில் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, நாளை மறுதினம் (22ம் தேதி) நடைபெறுகிறது.

விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள் விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வேல்குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை, அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30க்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. வைகாசி மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்தது. கோயிலில் உரிய முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சண்முக விலாச மண்டபத்தில் வைத்து திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கூட்டமிகுதியால் கோயில் சண்முக விலாச மண்டபம் முன்பே ஏராளமான திருமணம் நடந்தது. கோயில் வளாகம் மற்றும் சன்னதி தெருவில் திருமண ஜோடிகளும், அவர்களது குடும்பத்தாரும் சாரை சாரையாக சென்றதை காண முடிந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடியும் இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியிலும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

* ஜெல்லி மீன் மிதப்பதால் கடலில் குளிப்பதற்கு காலையில் தடை... மதியம் அனுமதி...

காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவு மிதக்கின்றன. இதனை தொடும் போது அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. நேற்று காலை ஜெல்லி மீன்கள், கடற்கரையில் அதிகளவில் காணப்பட்டதால் கோயில் நிர்வாகம் சார்பில் காலை 9.30 மணி முதல் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் தடையை மீறி பக்தர்கள் கடலில் குளிக்கவும், கால்களை நனைக்கவும் செய்தனர். இதையடுத்து ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் எச்சரித்து அவர்களை விரட்டினர். மதியம் 12.30 மணிக்கு மேல் கடலில் குளிப்பதற்கோ, கால் நனைக்கவோ தடையில்லை என்றும், ஜெல்லி மீன்கள் இருப்பதால் கவனமுடன் குளிக்குமாறும் போலீசார் அறிவித்தனர்.