மும்பை: திருமணம் என்பது காலாவதியான நடைமுறை என்றும் தனது பேத்தியை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் நடிகை ஜெயா பச்சன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்பியுமான ஜெயா பச்சன், எப்போதுமே தனது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் 52 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அவர், பொது நிகழ்ச்சிகளிலும் ஊடகங்களிடமும் கறாராகப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இன்றைய காலக்கட்டத்தின் திருமண வாழ்க்கை குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் தனது பேத்தி நவ்யா நவேலி நந்தா குறித்துப் பேசிய ஜெயா பச்சன், அவருக்குத் திருமண வாழ்வில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ‘திருமணம் என்பது காலாவதியான நடைமுறை. எனது பேத்தி திருமணம் செய்து கொள்வதை நான் விரும்பவில்லை. அவருக்கு விரைவில் 28 வயதாகிறது. இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு என்னுடைய வயதும் இல்லை. இப்போதைய குழந்தைகள் நம்மை விட மிகவும் புத்திசாலிகள். திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் மட்டுமே ஒரு உறவைத் தீர்மானிக்காது.
திருமணம் என்பது டெல்லி லட்டு போன்றது. சாப்பிட்டாலும் கஷ்டம், சாப்பிடாவிட்டாலும் கஷ்டம். எனவே வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ளாமல் அப்படியே மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டாடுங்கள்’ என்று தனது பேத்திக்கு விபரீத அறிவுரை வழங்கினார்.

