திருமண உதவித் திட்டத்துக்காக ரூ.45 கோடிக்கு 5460 தங்க நாணயங்கள் வாங்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு
சென்னை: திருமண உதவித் திட்டத்துக்காக ரூ.45 கோடிக்கு 5460 தங்க நாணயங்கள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்துக்காக தங்கம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சமூக நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க தேவைப்படும் 5,640 எண்ணிக்கையிலான 8 கிராம் - 22 காரட் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய வேண்டி, தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தியாளர்கள் / விற்பனையாளர்கள், தங்க ஆபரணங்கள் /தங்க நாணயங்கள் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களிடமிருந்து மின் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி படிவம் இன்று முதல் அக்.9ம் தேதி மாலை 03.00 மணி வரை பெறப்படும். ஒப்பந்தப்புள்ளிகள் அக்.9ம் தேதி மாலை 04.00 மணியளவில் மேற்கண்ட விலாசத்தில் ஒப்பந்தப்புள்ளி கூர்ந்தாய்வு குழுவால், சமூக நல இயக்குநர் முன்னிலையில் சமூக நல இயக்குநரகம், சென்னை-05-ல் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி படிவத்தினை https://tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து இன்று முதல் அக்.19ம் தேதி பிற்பகல் 01.00 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். EMD தொகை ரூ.45,12,000/-னை (ரூபாய் நாற்பத்து ஐந்து இலட்சத்து பன்னிரெண்டாயிரம் மட்டும்) இணையதளத்தின் வாயிலாக (online gate payment) மட்டுமே செலுத்தப்பட வேண்டும். ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முன் கூட்டம் செப்.23ம் தேதி நடைபெறவுள்ளது.