Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரின் கள்ளக்காதல் குற்றமில்லை... ஆனால் நஷ்டஈடு கோரலாம்: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கணவன் அல்லது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் (கள்ளத் தொடர்பு) ஈடுபடும் மூன்றாவது நபர் மீது, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) நஷ்டஈடு கோரி உரிமையியல் வழக்குத் தொடரலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது குற்றச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. தற்போது, அது குற்றமாகாது என்றாலும், அதுவே தம்பதிகளுக்கு இடையிலான திருமண முறிவுக்கு காரணமாக அமையும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடு கோர முடியும். திருமண உறவில் வேண்டுமென்றே, தவறான நோக்குடன் தலையிடும் மூன்றாவது நபருக்கு அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டிய கடமை உள்ளது.

அவரது செயலால் திருமணம் முறிந்தால், நஷ்டஈடு கோருவது செல்லும். அதே சமயம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்ட கணவன் அல்லது மனைவியின் செயல்பாடு, எந்தவித வற்புறுத்தலும் இன்றி முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தால், மூன்றாவது நபர் மீது நஷ்டஈடு கோர முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்குகளில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை நிரூபிக்க, கணவன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் ெசல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தகவல்களை மனைவி கோரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.