Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய வழக்கு; பாலியல் உறவுக்கு முன் ஜாதகம் பார்க்கவில்லையா..? எஸ்பி, டிஎஸ்பி-யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கிண்டல்

புதுடெல்லி: காதலித்து திருமணம் செய்ய மறுத்த வழக்கில், உறவுக்கு முன்பே ஜாதகப் பொருத்தத்தை சரிபார்த்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஒருவரும், துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ஒருவரும் கடந்த 2014ம் ஆண்டு ஒரே மாவட்டத்தில் பணியாற்றியபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த டி.எஸ்.பி.யை திருமணம் செய்து கொள்வதாக எஸ்.பி உறுதியளித்ததன் பேரில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பின்னர் எஸ்.பி, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் மீது பெண் டி.எஸ்.பி. பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த 2024ல் ரத்து செய்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.பி. பார்டிவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண வாக்குறுதி அளித்துவிட்டு அதிலிருந்து பின்வாங்கியதற்கு காரணம் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பெண் டி.எஸ்.பி. தரப்பு வழக்கறிஞர், இருவரின் ஜாதகங்களும் பொருந்தவில்லை என்பதே காரணம் என்றார். இதைக் கேட்டு புன்னகைத்த நீதிபதி பார்டிவாலா, ‘இது மிகவும் முக்கியமான கேள்வி. நட்சத்திரங்கள் பொருந்தவில்லை என்றால், நல்ல திருமண வாழ்க்கையை எப்படி வாழ முடியும்? எனவே, பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பே நீங்கள் ஜாதகங்களைப் பொருத்திப் பார்த்திருக்க வேண்டும் அல்லவா?.

திருமணம் செய்யும் நேரத்தில் தான் ஜோதிடரை அணுகுவீர்களா?’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் சமரச தீர்வு காணும் முயற்சி நடந்ததா? என நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, ரூ.5 கோடி இழப்பீடு கேட்பதாகவும், தற்போது தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதால் அவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியாது எனவும் எஸ்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது பெண் அதிகாரி தரப்பில், அவர் வற்புறுத்தப்பட்டே பாலியல் உறவுக்கு சம்மதித்ததாக வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘இதை யார் நம்புவார்கள்? நீங்கள் ஒரு டி.எஸ்.பி.யாக இருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டனர்.

இறுதியில், இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து மோதுவது யாருக்கும் பயனளிக்காது எனக் கருதிய நீதிபதிகள், இருவருக்கும் இடையே சுமூகமான தீர்வை எட்டுவதற்காக, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டலை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற வளாகத்தில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.