Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாளை தற்காலிக மார்க்கெட் வாசலில் குழி தோண்டியதால் வியாபாரிகள் கொந்தளிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை

நெல்லை: பாளை தற்காலிக மார்க்கெட் வாசல் பகுதியில் குழிகளை தோண்டி போட்டதால், இன்று காலையில் அங்கு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். பாளையில் இயங்கி வந்த மகாத்மா காந்தி மார்க்கெட் 60 ஆண்டுகள் பழமை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதற்காக மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக பாளை ஜவஹர் மைதானம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டையில் நவீன வசதிகளுடன் புதிய மார்க்கெட் ரூ.14.90 கோடியில் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. பழைய மார்க்கெட்டில் நிலவி வந்த இடநெருக்கடி, சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த புதிய மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. கடைகள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், பழைய மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் புதிய இடத்திற்குச் செல்லத் தயக்கம் காட்டி வருகின்றனர். புதிய மார்க்கெட்டில் வாடகை அதிகம், இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் மற்றும் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் போன்ற பல்வேறு காரணங்களை காட்டி வியாபாரிகள் அங்கு செல்லாமல் இருந்தனர். இது தொடர்பாக வியாபாரிகளுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், உடன்பாடு ஏற்பட்டு, சில வியாபாரிகள் தற்போது புதிய மார்க்கெட்டிற்கு கடைகளை கொண்டு செல்ல தொடங்கியுள்ளனர்.

இருப்பினும் பல வியாபாரிகள் இன்னமும் தற்காலிக மார்க்கெட் பகுதியிலே வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாளை- திருச்செந்தூர் சாலையில் மார்க்கெட் முகப்பில் பொதுமக்கள் செல்லும் பாதை உள்பட 4 புறங்களிலும் குழிகள் தோண்டப்பட்டு, தண்ணீரை வடிய வைக்கும் முயற்சிகள் நடந்தன. இதனால் அன்றாடத் தேவைகளுக்காக மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க முடியாமல் அவர்கள் தவித்தனர். குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் பெண்கள் குழி தோண்டப்பட்ட பகுதிகளைத் தாண்டிச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் இதுகுறித்து பாளை மண்டல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு வந்தபோது, பழைய மார்க்கெட்டை காலி செய்ய, மாநகராட்சி சார்பில் குழிகள் தோண்டி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் எங்களுக்கு இருக்கிற பணிகளை செய்யவே ஜேசிபி இல்லாதபோது, நாங்கள் ஏன் இங்கு வந்து குழி தோண்டப்போகிறோம் என தெரிவித்தனர். கடைசியில் பழைய மார்க்கெட்டில் இருந்து காலி செய்து சென்ற வியாபாரியே குழிகளை தோண்டியது தெரிய வந்தது. மார்க்கெட் இரு இடங்களில் செயல்பட கூடாது என தெரிவித்த அதிகாரிகள், அனைத்து வியாபாரிகளும் புது மார்க்கெட்டிற்கு செல்ல கேட்டு கொண்டனர்.