மெரினா உழைப்பாளர் சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற பெண் தூய்மை பணியாளர்கள் கைது: 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
சென்னை: மெரினா உழைப்பாளர் சிலை முன்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் திடீரென உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம், குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விடுவதை கண்டித்து கடந்த மாதம் 1ம் ேததி முதல் 13ம் தேதி வரை சென்னை ரிப்பன் மாளிகை அருகே மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 பகுதிகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்ததால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சென்னை மாநகராட்சி முன்பு இருந்து அகற்றினர்.
அதைதொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை 11 மணி அளவில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு 20க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் கையில் பணி நிரந்தரம், தனியார் மயத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தியபடி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுவாக மெரினா பகுதியில் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்த சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை மீறி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாவிரதம் மேற்கொண்ட பெண் தூய்மை பணியாளர்களை அங்கிருந்து கலைந்து செல்லும் படி கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் தூய்மை பணியாளர்கள், நாங்கள் கடந்த 3 நாட்களாக எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் எங்கள் கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் மெரினா உழைப்பாளர் சிலை முன்பு நாங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள வந்ததாக கூறி கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.
இருந்தாலும் போலீசார் பெண் காவலர்கள் உதவியுடன் தடையை மீறி உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்ற பெண் தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்து தூக்கி சென்றனர். அப்போது பெண் தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை கூறி கூச்சலிட்டனர். அப்போது 2 பெண் தூய்மை பணியாளர்கள் வெயில் தாக்கத்தால் மயங்கினர். அவர்களை போலீசார் முதல் உதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் அருகில் உள்ள சமுதாய கூடங்களில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.