Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கன்னிப்பூ அறுவடையில் நெல் விலை வீழ்ச்சி; குமரியில் கும்பப்பூ சாகுபடி பணி தீவிரம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப் பூ அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. அறுவடை பணி முடிந்த விவசாயிகள் கும்பபூ சாகுபடிக்கு வயல்களை பண்படுத்தி வருகின்றனர். கும்ப பூ சாகுபடிக்கு நீண்ட நாளான பொன்மணி ரக நெல்லை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பறக்ைக, சுசீந்திரம், தேரூர், புதுக்கிராமம், புத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

பறக்கை, சுசீந்திரம், தேரூர் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நாற்றங்கால் தயாரித்து முடித்துவிட்டனர். நாற்று வளர்ந்து 24 நாட்கள் கடந்த பிறகு வயல்களில் நாற்று நடவு பணியை விவசாயிகள் மேற்கொள்ள ஆயத்தம் ஆகிய வருகின்றனர். வயல்களுக்கு தேவையான அனைத்து உரங்களும் இருப்பு இருப்பதாக வேளாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மானிய விலையில் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெரும்பாலான விவசாயிகள் மானிய நெல் ரகத்தை வாங்கி சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர். சில விவசாயிகள் இரு பருவத்திலும் பயன்படுத்தப்படும் திருப்பதிசாரம் 5 ரக நெல்லை சாகுபடி செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடையின்போது விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். கடந்த வருடம் ஒரு கோட்டை நெல் நெல்கொள்முதல் நிலையத்திற்கு நிகராக வெளி மார்க்கெட்டில் ரூ.2000 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டது.

இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது நெல்லிற்கு போதிய விலை இல்லை. ஒரு கோட்டை நெல் ரூ.1700க்கு வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் ஒரு கோட்டையில் ரூ.300 வரை இழக்கின்றனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு மேல் இருந்தால், அதனை உலரவைத்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளி மார்க்கெட்டிலும் ஈரப்பதத்தை காரணம் காட்டி விலையை குறைத்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு நெல் ெகாள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகிறது. இதனால் அங்கு கொடுக்கப்படும் ஒரு கிலோ நெல்லிற்கு ரூ.25 கிடைக்கிறது. அடங்கல், ஆதார், வங்கி புத்தக நகல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொடுத்து எடைபோட்ட மறுநாளை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆனால் பெரும்பாலான விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த கையோடு தனியார் மில்களில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். உடனடியாக பணம் கிடைப்பதால், அதனை விவசாயிகள் ஆர்வமுடன் கொடுக்கின்றனர். ஆனால் தற்போது ஈரப்பதத்தை தனியார் வியாபாரிகளும் கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருக்கும் பட்டத்தல் விலை குறைத்து கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது ஒரு கோட்டை ரூ.1700 கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை குறைக்கின்றனர். இதனால் விவசாயிகள் அதிக படியான பணத்தை இழக்ககூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முடிவை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணிக்கு விவசாயிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். கும்பபூ அறுவடை பணி நடக்கும்போது நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் விலைக்கு நிகராக வெளி மார்க்கெட்டிலும் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.