*89 வயது முதியவர் அசத்தல்
சாத்தூர் : சாத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு, கேன்சர் தடுப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற மாரத்தானில் 1700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போதை பொருள் தடுப்பு, கேன்சர் ஒழிப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இந்த மராத்தான் ஓட்டப்பந்தயம் 5 கி.மீ மற்றும் 10 கி.மீ என இரு பிரிவுகளில் நடைபெற்றது. மராத்தான் ஓட்டத்தில் 3 வயது சிறுவர்கள் முதல் சுமார் 90 வயது முதியவர்கள் என சுமார் 1700 க்கும் மேற்பட்டோர் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் என பல குழுக்களாக கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டி சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி மெயின் பஜார் வழியாக மேட்டுப்பட்டி வரை சென்று சடையம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நிறைவு பெற்றது. மாரத்தான் பந்தயத்தில் ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு கேடயங்களையும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வழங்கினார். மாரத்தான் பந்தயத்தில் சிறப்பு நிகழ்வாக ஏராளமான முதியவர்கள் பங்கேற்றனர்.
மேலும் 89 வயதான சிவகாசியை சேர்ந்த முதியவர் 200க்கும் மேற்பட்ட மாரத்தான் பந்தயங்களில் கலந்து கொண்டு பெற்ற பதக்கங்களை காட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் 80 வயதான முதியவர் விழா மேடையில் சிரசாசனம் செய்து காண்பித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.