சிவகங்கை: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், பெரிங்கோட்டுகுராவை சேர்ந்தவர் ரூபேஷ் (எ) பிரவீன் (64). மாவோயிஸ்ட் இயக்க தலைவர். இவர் மீது தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது இவர் கேரள மாநிலம், வையூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ல் இவரை கோயம்புத்தூரில் உள்ள கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய சோதனையில் போலி ஆவணங்கள் மூலம் வாங்கி ஏராளமான சிம் கார்டுகள் கிடைத்தன. அந்த சிம் கார்டு மூலம் ரூபேஷ், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான பல்வேறு தகவல்களை பேசியுள்ளார். இந்த வழக்கை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அறிவொளி விசாரித்து ரூபேஷ்க்கு ஆயுள் தண்டனை, ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.