பிப்ரவரி 15ம் தேதிக்குள் சரணடைய விரும்புவதாக மராட்டியம், ம.பி., சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு மாவோயிஸ்ட் இயக்கம் கடிதம்
டெல்லி : பிப்ரவரி 15ம் தேதிக்குள் சரணடைய விரும்புவதாக மராட்டியம், ம.பி., சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு மாவோயிஸ்ட் இயக்கம் கடிதம் எழுதி உள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் மாவோயிஸ்ட்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்ட்டுகள் சரணடைவது குறித்து கூட்டாக முடிவெடுக்க, பிப்., 15 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மாவோயிட்டுகளின் மகாராஷ்டிரா மத்தியப்பிரதேசம் சத்தீஸ்கர் சிறப்பு மண்டலக்குழு 3 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ஆயுதங்களை ஒப்படைக்கவும், மறுவாழ்வு அளிக்கும் அரசின் திட்டங்களில் சேரவும் பிப்., 15 வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அதுவரை தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக செயல்படும் தங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு வசதி இல்லை என்பதால் கால அவகாசம் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆயுதங்களை கைவிட்டு ஏற்கனவே சரணடைந்த மாவோயிஸ்ட்டுகளுக்கும் இந்த கோரிக்கையில் உடன்பாடு உள்ளது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கள் நிலைப்பாட்டில் மாவோயிஸ்டுகள் உறுதியாக இருந்தால் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சத்தீஸ்கர் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.


