மானூர் : மானூரில் தபால் நிலைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உடனடியாக மாற்றியமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானூரில் காவல் நிலையத்திற்கு பின்புறம் மானூர் துணை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தபால் அதிகாரி, 2 அலுவலர்கள் பணி புரிகின்றனர்.
இந்த தபால் நிலையத்தின் கீழ் களக்குடி, தெற்குப்பட்டி, சீதைக்குறிச்சி, எட்டாங்குளம், மதவக்குறிச்சி, கரம்பை, கானார்பட்டி, பிள்ளையார்குளம், கட்டாரங்குளம் என 9 போது கிளை தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த தபால் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் தினமும் 1000க்கும் மேற்பட்ட தபால்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த தபால் நிலையத்தில் மாதம் ரூ.2 கோடிக்கு மேல் வரவு செலவு செய்யும் பயனாளிகள் உள்ளனர்.
இந்த தபால் நிலைய கட்டிடம்.
100 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் கூரைகளால் அமைக்கப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் வாடிக்கையாளர்களுக்கும், பணி புரியும் அலுவலர்களுக்கும் பாதுகாப்பின்றி எந்த நேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுவர்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டு மழை நீர் உட்புகுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் அருகிலுள்ள தபால் நிலைய பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்துள்ளன. எனவே ஒன்றிய அரசின் தபால் துறை, உடனடியாக மானூர் தபால் நிலையத்தை வாடிக்கையாளர் நலன் கருதி இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென சமூக ஆர்வலர்களும், வாடிக்கையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


