மானூர் அருகே கானார்பட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு மழையின்றி சேதமடைந்த உளுந்து பயிருக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்
*கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மழையின்றி சேதமடைந்த உளுந்து பயிருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மானூர் வட்டார விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலாளர் ஆபிரகாம் தலைமையில் மானூர் வட்டார விவசாயிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த ஆண்டு உளுந்து பயிருக்கு காப்பீடு செய்து இருந்தனர். போதிய மழை இல்லாததால் உளுந்து பயிர்கள் சரிவர விளையவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை நேர் செய்யும் வகையில் பயிர் காப்பீட்டுக்கான தொகையை வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் இதனால் வரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
எனவே இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.மானூர் கானார்பட்டி கிராமத்தில் இப்போது 15 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால் மக்கள் மானூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள குடிநீர் குழாயில் சென்று தண்ணீர் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கானார்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.