நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நேற்று அரியர் தேர்வு வினாத்தாள் மாறிய விவகாரம்: குழு அமைப்பு!
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நேற்று அரியர் தேர்வு வினாத்தாள் மாறிய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்று கண்டறிய பல்கலை. நிர்வாகம் குழு அமைத்துள்ளது. இளங்கலை வணிகவியல் பி.காம்., அரியர் தேர்வுகள் நேற்று மதியம் திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 108 கல்லுாரிகளில் நடந்தது. மூன்றாம் ஆண்டு பி.காம். மாணவர்களுக்கான மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் அரியர் தேர்வுக்கு பதிலாக ரீடைல் மார்க்கெட்டிங் வினாத்தாள் வழங்கப்பட்டது. எனவே தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு வேறு வினாத்தாள் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வுகள் நடந்தன.
இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வு ஆணையர் கூறுகையில்; பல்கலைக்கான வினாத்தாள்கள் அச்சகத்தில் ஏற்பட்ட குளறுபடியால் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது. அவை அடங்கிய கட்டுகளின் வெளிப்பகுதியில் தனி கோடு எண்கள் தரப்பட்டுள்ளன. அந்த எண்கள் மாறியதால் வினாத்தாள்களும் மாறின. பின்னர் உடனடியாக சரி செய்யப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் தரப்பட்டது என கூறினர். இந்நிலையில், தேர்வு வினாத்தாள் மாறிய விவகாரம் தொடர்பாக தவறு செய்தவர்கள் யார்? என்று கண்டறிய பல்கலைக்கழக நிர்வாகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவானது தவறு செய்தவர்கள் யார்?, வினாத்தாள் கசிவதற்கு வழிவகுத்ததா என்ற கோணத்தில் விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

