மன்னார்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் நாளை தொடக்கம்
சென்னை: முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மன்னார்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை (1.10.2025) காலை 11.00 மணி முதல் செயல்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- மன்னார்குடி பகுதியிலிருக்கும் மாணவிகளின் உயர்கல்வி தேவையினை பூர்த்தி செய்ய முதலமைச்சர் திருவாரூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் மன்னார்குடி நகராட்சியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்க அறிவிப்பு வெளியிட்டார்கள்.
அதற்கிணங்க தற்போது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 5 புதிய பாடப்பிரிவுகளுடன் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க உரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பி.ஏ வரலாறு, பி.காம், பி.எஸ்.சி கணினி அறிவியல், பி.எஸ்.சி நுண்ணுயிரியல் மற்றும் பி.சி.ஏ போன்ற ஐந்து பாடப்பிரிவுகளுடன் மேற்கண்ட புதிய மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை மேற்கொள்ள ஒரு சிறப்பின நேர்வாக 1.10.2025 காலை 11.00 மணி முதல் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணையதள விண்ணப்பப் பதிவுக்கான www.tngasa.in என்ற இணைய தள முகவரி 01.10.2025 காலை 11.00 மணி முதல் செயல்படும்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவிகள் மேற்கண்ட இணைய தள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.