புதுடெல்லி: கடந்த 1991ம் ஆண்டு இந்தியா பொருளாதார சிக்கலை சந்தித்தபோது, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமித்தார். அப்போது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மன்மோகன் சிங், பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் கொள்கைக்கு வித்திட்டார். பின்னர் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலமானார்.
இந்நிலையில், மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பி.வி.நரசிம்ம ராவ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.வி.நரசிம்ம ராவ் நினைவு அறக்கட்டளை வௌியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பொருளாதார மாற்றம் மற்றும் தேசத்தை கட்டி எழுப்புவதில் மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக பொருளாதாரத்துக்கான பி.வி.நரசிம்ம ராவ் விருது டெல்லியில் கடந்த வாரம் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரது மனைவி குர்ஷரன் கவுர் பெற்று கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.